மாவட்டத்தில் முழு ஊரடங்கில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடின பொதுமக்கள் வீட்டிற்குள் முடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் வீ்ட்டிற்குள் முடங்கினர்.
புதுக்கோட்டை:
கடைகள் அடைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலானது. புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அத்தியாவசியமான மருந்து கடைகள், பால் கடைகள் திறந்திருந்தன. ஓட்டல்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் மட்டும் வினியோகிக்கப்பட்டன. பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. மேலும் வாகனங்கள் எதுவும் அதிகம் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சாடி காணப்பட்டன.
பொதுமக்கள் வீட்டிற்குள் முடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே வாகன சோதனைகளில் போலீசார் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கின. ஒரு சிலர் அத்தியாவசிய பணிக்கு மட்டும் வெளியில் சென்றனர். பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். சமையல் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை நேற்று முன்தினமே பொதுமக்கள் கடைகளில் வாங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாலையோரம் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவளித்தனர். அம்மா உணவகம் வழக்கம் போல திறந்திருந்தது. அங்கு பொதுமக்கள் சிலர் நேற்று காலை மற்றும் மதியம் பசியாற்றினர்.
கிருமி நாசினி தெளிப்பு
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. அப்போது போக்குவரத்து கழக பணிமனை உதவி மேலாளர் சுப்பிரமணியன், கிளை மேலாளர் தில்லைராஜ், பயிற்சி ஆசிரியர் செபஸ்தியான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆலங்குடி, விராலிமலை...
ஆலங்குடி, விராலிமலை, ஆவுடையார்கோவில், அன்னவாசல், இலுப்பூரில் மருந்தகம், உணவகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தடையை மீறி தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து அவர்களுக்கு முககவசம் வழங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கறம்பக்குடி, அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, திருவரங்குளம், ஆதனக்கோட்டை, கீரமங்கலம், கந்தர்வகோட்டை, காரையூர், மணமேல்குடி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன.
கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளான மணமேல்குடி முதல் அரசகரை வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன முன்னதாக ஊரடங்கு காரணமாக ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதனால் மீன்பிடித் துறை முகங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story