தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6,200 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6 ஆயிரத்து 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6 ஆயிரத்து 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
இது குறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வழக்கு
உருமாறிய கொரோனா வைரசான ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200-ம் அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற 908 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 155 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 170 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 132 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 61 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 75 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 211 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 69 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 35 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
6,200 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் என 6 ஆயிரத்து 200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் ஊரடங்கில் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story