திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை


திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Jan 2022 11:02 PM IST (Updated: 9 Jan 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே, பாட்டி இறந்ததன் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பல்லடம்
பல்லடம் அருகே, பாட்டி இறந்ததன் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண் திருமணம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் தென்னைமர தோட்டத்தை சேர்ந்த கந்தசாமி. இவருடைய மனைவி ஜானகி. இவர்களுடைய மகள்  மலர்விழி (வயது 27). கந்தசாமி கடந்த  15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால்  ஜானகியும், அவருடை மகள் மலர்விழியும் தனியாக வசித்து வந்தனர்.  இதனால் மலர்விழிக்கு திருமண ஏற்பாடுகளை அவருடைய சித்தப்பா செய்து வந்தார். அதை தொடர்ந்து மலர்விழிக்கும்  திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களுடைய திருமணத்தை வருகிற மார்ச் மாதம் சுபமுகூர்த்த தினத்தில் விமரிசையாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். 
இந்த நிலையில் மலர்விழிக்கு திருமண  ஏற்பாடு செய்த சித்தப்பாவின் தாயார்  (மலர்விழிக்கு பாட்டி முறை) இறந்து விட்டதால் மலர்விழியின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மலர்விழி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றனர். மலர்விழியும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்.
தற்கொலை 
பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது மலர்விழியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மலர்விழியை அக்கம் பக்கம் தேடினர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்களது தோட்டத்து கிணற்றை பார்த்தபோது அதில் மலர்விழி பிணமாக மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடம் வந்த போலீசார் மலர்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில்  திருமணம் தள்ளி வைக்கப்பட்ட மனவேதனையில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story