தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 9 Jan 2022 11:25 PM IST (Updated: 9 Jan 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் இருந்து திருஈங்கோய்மலை வரை உள்ள திருச்சி-சேலம் நெடுஞ் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையை சரிசெய்தனா். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
ரவிக்குமார், தொட்டியம், திருச்சி. 

உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முள்ளூர் பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை. 

குடிநீர் குழாயில் உடைப்பு 
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. வீணாகும் குடிநீர் அருகே  தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் போதுமான குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொட்டப்பட்டு, திருச்சி. 

குடிநீர் குழாய் அருகே தேங்கும் சாக்கடை 
பெரம்பலுர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி அண்ணாநகரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயின் அருகில் வடிகால் வசதி இல்லாததால் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் தேங்கி சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. இந்த குழாயில் பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்வதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், துங்கபுரம், பெரம்பலூர். 

சாலையில் திடீர் பள்ளம் 
அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் தார் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அருகில் சென்று திடீரென பிரேக் பிடிப்பதினால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காமராஜபுரம், அரியலூர். 

கொசுத்தொல்லையால் மக்கள் அவதி 
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், புத்தாநத்தம் ஊராட்சி பட்டனிதெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிது. இதனால் இவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புத்தாநத்தம், திருச்சி. 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா? 
கரூர் மாவட்டம், வாங்கல் ஊராட்சி, காமாட்சி அம்மன் கோவில் தெரு கடைசி வீதி பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வாங்கல், கரூர். 

Next Story