உறவினர் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது
கருங்கல் அருகே இரவல் கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் உறவினர் வீட்டுக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே இரவல் கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் உறவினர் வீட்டுக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அடகு வைக்க நகையை வாங்கினார்
கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை வாவத்தறவிளையை சேர்ந்தவர் சத்திய தாஸ், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா (வயது 37). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சந்தோஷ் ராஜ் (36), தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும் அதற்காக அடகு வைக்க நகை இரவல் தருமாறு கேட்டார். அத்துடன் நகையை 2 மாதத்தில் திரும்ப கொடுப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அமுதா 3½ பவுன் நகையை கொடுத்ததாக தெரிகிறது.
மாதங்கள் பல கடந்த பின்பும் சந்தோஷ் ராஜ் நகையை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
தீ வைப்பு
இதையடுத்து அமுதா, நகையை திரும்ப தராவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். அப்போது சந்தோஷ் ராஜ், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் உன்னையும் உனது வீட்டையும் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சந்தோஷ்ராஜ், அமுதாவின் வீட்டுக்கு சென்று அங்கு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்துள்ளார். இதில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து வீட்டின் முன் பகுதி மற்றும் ஜன்னல் தீயில் கருகியது.
இதுகுறித்து அமுதா கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் ராஜை கைது செய்தனர்.
இரவல் கொடுத்த நகையை திரும்ப கேட்டதால் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story