நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ந் தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ந் தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
கொடியேற்றம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி
விழாவில் திருநெல்வேலி என்று ஊர் பெயர் வருவதற்கு காரணமாக அமைந்த திருவிளையாடல் புராணமான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது. 18-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு கோவில் சவுந்தர மண்டபத்தில் நடராஜர் திருநடனம் காட்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் அடிப்படையில் விழா நிகழ்ச்சிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
திருப்புடைமருதூர்
வீரவநல்லூர் அருகே அமைந்துள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர்- கோமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி கொடியேற்றம் நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், தைப்பூச தீர்த்தவாரி மற்றும் தெப்பத்திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பணகுடி
இதேபோல் பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் நம்பிசிங்கபெருமாள் கோவிலிலும் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று முழு ஊரடங்கால் கோவிலில் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடந்தது. வருகிற 17-ந் தேதி தேரோட்டமும், 18-ந் தேதி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
Related Tags :
Next Story