ராணிப்பேட்டை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 10 Jan 2022 12:17 AM IST (Updated: 10 Jan 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்கள் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்கள் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது. 

தொழிற்சாலைகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை நகரில் நேற்று அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. வாகனங்கள் செல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் உள்ள எம்.பி.டி.சாலை எனப்படும் சென்னை- மும்பை சாலை, கர்நாடகம், ஆந்திரா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். அதனால் இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும். நேற்று முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் சென்றன. இதனால் இச்சாலை பரபரப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தடுப்புகள் அமைத்து சோதனை

சிப்காட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும்.  ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதிலும் சில தொழிற்சாலைகள் எப்போதும் இயங்கும். ஆனால் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிப்காட் பகுதியில் உள்ள கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் சிப்காட் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. ராணிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஒரு சில கடைகள் திறந்திருந்தன.

ராணிப்பேட்டை போலீசார் முத்துக்கடை பகுதியிலும், சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் உள்ள சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவசியமின்றி ஊர் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். முகக்கவசம் இல்லாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதமும் விதித்தனர். நேற்று ஊரடங்கு என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

அரக்கோணம் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தாசில்தார் பழனிராஜன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், முகமது இலியாஸ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனை தொடர்ந்து ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே ஆய்வு செய்தார். 

 அப்போது அந்த பகுதியில் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என டிரோன் மூலம் ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த போலீசாரிடம் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாசில்தார் பழனிராஜன் மற்றும் தலைமை காவலர் சிவக்குமார் ஆகியோர் உடனி இருந்தனர்.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன் தலைமையில் தாசில்தார் வெற்றிகுமார், சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் நகராட்சி முழுவதும் ராட்சத எந்திரத்தின்‌ மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, லட்சுமி நரசிம்மர் கோவில், காந்தி சாலை, அண்ணாசாலை, பஜார் தெரு, திருத்தணி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளித்தனர்.

நேற்று முழு ஊரடங்கால் சோளிங்கரில் பல்வேறு சாலைகள், தெருக்கள், கடை வீதிகளில் வாகனம், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Next Story