அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி


அருணாசலேஸ்வரர் கோவிலில்  2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 10 Jan 2022 12:25 AM IST (Updated: 10 Jan 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து திருவண்ணாமலை நகரில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மாட வீதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் ஊரடங்கு கண்காணிப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் தற்காலிக காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைய உள்ள திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள மைதானத்தையும் பார்வையிட்டு வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
உத்தராயண புண்ணிய காலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் உத்தராயண புண்ணிய கால உற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

10 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும். நிகழ்ச்சியையொட்டி காலை மற்றும் இரவில் சாமி மாட வீதியுலா நடைபெற்று வந்தது. இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் வீதி உலா ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.  இது ஆகம விதி மீறல் என்று பக்தர்கள் மத்தியில் ஆட்சேபனை எழுந்தது.

2 தவணை தடுப்பூசி

இது குறித்து கோவில் முக்கிய குருக்களான ரமேஷ் மற்றும் கீர்த்திவாசனை வரவழைத்து விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சாமி மாட வீதிஉலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ந் தேதி (சனிக்கிழமை) திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும்.
மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான சான்று அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story