வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.7½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.7½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x
தினத்தந்தி 10 Jan 2022 12:25 AM IST (Updated: 10 Jan 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.7 கோடியே 65 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.7 கோடியே 65 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழுஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமையன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழுஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுபிரியர்கள் குவிந்தனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது, பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகளில் அவை விற்று தீர்ந்தன.

ரூ.7½ கோடிக்கு விற்பனை

வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.4¾ கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின. அதேபோன்று அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.2 கோடியே 90 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்று ரூ.7½கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக ஒருநாளைக்கு ரூ.2¾ கோடி முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் முழு ஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் ஒரேநாளில் வழக்கத்தை விட கூடுதலாக ரூ.2 கோடி மதிப்பிலான மது, பீர்வகைகள் விற்பனையாகி உள்ளன. இதேபோன்று அரக்கோணம் கோட்டத்தில் வழக்கத்தை விட ரூ.1 கோடி மதிப்பிலான மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story