மாலைபோல் அணிந்து சாராய பாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மாலைபோல் அணிந்து சாராய பாக்கெட்டுகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
ஞாயிறு முழு ஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆனால் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுபானம் மற்றும் சாராய கடைகள் திறந்து இருந்தன. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். அதன்படி கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டுகள் பாண்டியன், தனசேகர் ஆகியோர் வண்டிப்பாளையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
வாலிபர் கைது
அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகில் நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். மேலும் அவரது சட்டையை கழற்றி சோதனை செய்தபோது, தலா 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாராய பாக்கெட்டுகளை கோர்த்து மாலையாக அணிந்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் மணிகண்டன் (வயது 35) என்பதும், புதுச்சேரியில் 40 சாராய பாக்கெட்டுகளை வாங்கி, அதனை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்து கடலூருக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராய பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story