முழு ஊரடங்கு எதிரொலி ஈரோடு மாவட்டத்தில் ரூ.8½ கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி ரூ.8½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி ரூ.8½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 கடைகளில் பார் வசதி உள்ளது. இங்கு தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது. பண்டிகை காலங்களில் 2 மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
நீண்ட வரிசை
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் குவிந்தனர். குறிப்பாக மாலையில் இருந்து இரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நீண்ட வரிசையில் நின்று மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச்சென்றனர். குறிப்பாக ரம், விஸ்கி, பிராந்தி, பீர் வகைகளை மது பிரியர்கள் அதிக அளவில் அள்ளிச்சென்றனர். இதன் காரணமாக வழக்கத்தை விட நேற்று முன்தினம் மது விற்பனை அமோகமாக இருந்தது.
ரூ.8½ கோடிக்கு மது விற்பனை
இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடையிலும் வழக்கத்தைவிட சரக்குகள் கூடுதலாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இரவில் டாஸ்மாக் கடை மூடும் வரை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.8 கோடியே 38 லட்சத்துக்கு மது பானங்கள் விற்று தீர்ந்ததாகவும், இது சாதாரண நாட்களை விட கூடுதலாக ரூ.3 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story