தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் ராசிபுரம்- ஆட்டையாம்பட்டி பிரதான சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து 2 மாதங்களாக குடிநீர் வீணானது. இதனால் அந்த வழியாக செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து கடந்த 3-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தனர். செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
சாலை சீரமைக்கப்படுமா?
தர்மபுரி நகராட்சி 13-வது வார்டு எம்.ஜி.ஆர்.நகர் 2-வது தெருவில் குடிநீர் குழாய் இணைப்புக்காக சிமெண்டு சாலை தோண்டப்பட்டது. அந்த பணி முடிந்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.
-ஊர்மக்கள், எம்.ஜி.ஆர்.நகர், தர்மபுரி.
ஆபத்தான கிணறு
சேலம் வீரபாண்டி ஒன்றியம் எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி கொக்கான்காடு பாரதியார் தெருவில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் பூனை, நாய் மற்றும் குழந்தைகளும் தவறி விழுகிறது. சுமார் 15 அடி ஆழமுள்ள கிணறை மண் போட்டு மூட வேண்டும் இல்லை என்றால் கிணற்றை சுற்றி இரும்பு கம்பி வேலை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஆபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த திறந்தவெளி கிணறை மூட நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சேகர், கொக்கான்காடு, வீரபாண்டி.
பழுதடைந்த சாலை
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக உள்ளது. பழுதடைந்த இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக அண்ணா நினைவு வளைவு அருகில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே பழுதடைந்துள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-சுதர்சன், கிருஷ்ணகிரி.
தெருநாய்கள் தொல்லை
சேலம் குகை 46-வது வார்டு பட்டாரபயில் பகுதியில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் தெருவில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-ஊர்மக்கள், குகை, சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் பெரியகொல்லபட்டி 6-வார்டில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து பல வருடங்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டது. நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
-ஊர்மக்கள், பெரியகொல்லப்பட்டி, சேலம்.
தெருவிளக்குகள் எரியவில்லை
சேலம் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்மாபேட்டை பகுதியில் சூரிய சக்தியினால் எரியும் தெருவிளக்குகள் உள்ளது. இது கடந்த 6 மாதங்களாக எரிவதில்லை. 3 ரோடு பகுதியான இங்கு எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்து தெருவிளக்கு எரியச் செய்யவேண்டும்.
-இளங்கோ, பொன்னம்மாபேட்டை, சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தர்மபுரி இலக்கியம்பட்டி டி.ஏ.எம்.எஸ். காலனி எதிரில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்துள்ள குப்பைகளை அள்ளினால் நோய் பரவுவதை தவிர்க்கலாம். குப்பை தொட்டியும் வைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
சேலம் மகேந்திரபுரி பேங்க் காலனி 4-வது தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த தெருவில் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் மக்கள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து குப்பையை அள்ளி சுத்தம் செய்வார்களா?
-ஆர்.சோனியா, மகேந்திரபுரி, சேலம்.
Related Tags :
Next Story