முழு ஊரடங்கால் குமரியில் சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் குமரியில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Jan 2022 1:43 AM IST (Updated: 10 Jan 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் வீடுகளில் மக்கள் முடங்கினார்கள். சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

நாகர்கோவில்:
முழு ஊரடங்கால் வீடுகளில் மக்கள் முடங்கினார்கள். சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ‘ஒமைக்ரான்’ வைரசும் அச்சுறுத்துகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதையொட்டி காய்கறி மற்றும் மளிகை கடைகள், இறைச்சி கடைகள், நகை கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. மதுக்கடைகளும் மூடப்பட்டன. பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. 
மேலும் கார், ஆட்டோ, லாரிகள் ஓடவில்லை.  மேலும் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடசேரி கனகமூலம் சந்தை, கோட்டார் மார்க்கெட், அப்டா மார்க்கெட், மீன் சந்தைகள் ஆகியவை நேற்று செயல்படவில்லை. இதனால் சந்தைகளும், மார்க்கெட்டுகளும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. பொது போக்குவரத்து இல்லாததாலும், கடைகள் மூடப்பட்டதாலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
அந்த வகையில் மணிமேடை சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு, வடசேரி, கோட்டார், ஆசாரிபள்ளம், கோர்ட்டு ரோடு, கேப் ரோடு, கே.பி.ரோடு, பாலமோர் ரோடு செம்மாங்குடி ரோடு என அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தன. மேலும் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகியவையும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
மார்த்தாண்டம்
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி நேற்று முழு ஊரடங்கால் சாலைகளில் வாகனங்கள் இன்றியும், சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.
மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மார்த்தாண்டம் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
குளச்சல் 
குளச்சல், தக்கலை, குழித்துறை, திருவட்டார், நித்திரவிளை, களியக்காவிளை, குலசேகரம், ஆரல்வாய்மொழி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மொத்தத்தில் முழு ஊரடங்கு காரணமாக குமரி மாவட்டமே முடங்கியது.
அதே சமயம் பாலகங்கள், மருந்து கடைகள் வழக்கம் போல செயல்பட்டன. மேலும் ஒரு சில இடங்களில் ஓட்டல்களும் திறக்கப்பட்டு இருந்தது. அங்கு உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் கோவில்கள் மூடப்பட்டு இருந்த போதிலும் அங்கு வழக்கமான பூஜைகள் நடந்தன.
போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அந்த வகையில் நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பு, வடசேரி சந்திப்பு, டெரிக் சந்திப்பு உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 60 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது தேவையில்லாமல் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களிலும், 4 சக்கர வாகனங்களிலும் வெளியே சுற்றி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். மேலும் ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்காவிளை உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது. கடற்கரை பகுதிகளிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. மொத்தத்தில் குமரி மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
சுப நிகழ்ச்சிகள்
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் சுப நிகழ்ச்சிக்கு செல்பவர்களும், ரெயிலில் வருபவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு போலீசாரின் அனுமதியுடன் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி காலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களது ஊர்களுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும் சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
பால் வினியோகம் மற்றும் அவசர தேவைகளுக்காக வெளியே சென்றவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் அவ்வாறு வெளியே சென்றவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி நாகர்கோவில் மாநகரில் ஆதரவற்றோர் மற்றும் சாலை ஓரங்களில் வசித்து வரும் மக்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. 
முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் நேற்று வீடுகளிலேயே முடங்கினர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. அந்தவகையில் ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதை உணரமுடிந்தது.

Next Story