மேகதாது திட்டத்தை உடனே அமல்படுத்த கோரிக்கை; அரசு விதித்த தடையை மீறி காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியது
மேகதாது திட்டத்தை உடனே அமல்படுத்த கோரி அரசு விதித்த தடைகளை மீறி காங்கிரசார் பாதயாத்திரையை நேற்று தொடங்கினர். இதனால் கொரோனா விதிகளை மீறி பாதயாத்திரையை தொடங்கிய காங்கிரசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
அரசு கோரிக்கை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தடைகள் உள்ள நிலையில் மேகதாது திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக அரசியல் நிகழ்ச்சிகள், ஆன்மிக விழாக்களுக்கு அரசு தடை விதித்தது. மேலும் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், அரசு எந்த கட்டுப்பாட்டை விதித்தாலும் திட்டமிட்டப்படி பாதயாத்திரையை மேற்கொள்வோம் என்று அறிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு, மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களின் பாதயாத்திரையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதை காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். இதற்கிடையே பாதயாத்திரை தொடங்க இருந்த நிலையில் ராமநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பாதயாத்திரை
இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை தொடக்க விழா நேற்று காலை ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆறு ஓடும் சங்கமம் என்ற பகுதியில் நடைபெற்றது. காவிரி ஆற்றை ஒட்டியபடி விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு, முரசு கொட்டி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் மந்திரிகள் எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல் உள்பட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் டொள்ளு குனிதா உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைவர்கள் பேசி முடித்த பிறகு தடை உத்தரவை மீறி பாதயாத்திரை தொடங்கியது. பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களும் பங்கேற்றனர்.
சட்ட நடவடிக்கை
இந்த பாதயாத்திரை கனகபுரா வழியாக ராமநகர் வந்து, பிறகு அங்கிருந்து பிடதி வழியாக வருகிற 19-ந் தேதி பெங்களூரு வந்தடைகிறது. பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனால் பாதயாத்திரை நடத்தும் காங்கிரசார் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாதயாத்திரையை தடுத்தால் அது அரசியல் ரீதியாக பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசு கருதுகிறது. அதனால் பாதயாத்திரையை நடத்தவிட்டு அதில் பங்கேற்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேகதாது திட்டத்தில் பா.ஜனதா அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், நடிகர்கள் துனியா விஜய், சாது கோகிலா, உமாஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உணவு-குடிநீர்
ஒரு நாளைக்கு 13 முதல் 15 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எங்கெங்கு தங்குவது, எங்கு மதிய உணவு சாப்பிடுவது என்பது குறித்து முழு விவரங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளன. பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் காங்கிரசார் செய்துள்ளனர். ஆனால் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசரை கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற எந்தவித கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசாரின் பாதயாத்திரை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மேகதாது திட்டம்
கர்நாடகத்தில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது அக்கட்சி மேகதாது திட்டத்தை செயல்படுத்த என்ன செய்தது?. அதன் பிறகு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி வந்தது. அப்போது நீர்ப்பாசனத்துறை மந்திரியாக டி.கே.சிவக்குமார் இருந்தார். மேகதாது திட்டத்தை அமல்படுத்த அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்.
காங்கிரஸ் கட்சியினருக்கு மேகதாது திட்டம் தேவை இல்லை. அதில் அரசியல் செய்து ஓட்டு வாங்க வேண்டும்.
நடத்த வேண்டாம்
கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கை மீறி பாதயாத்திரை மேற்கொண்டது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் அதிகாரிகளும் நேரில் சென்று கொரோனா பரவுவதால் பாதயாத்திரை நடத்த வேண்டாம் என்று கூறினர். ஆனால் காங்கிரசார் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். கொரோனா தடுப்பு விதிகளை மீறி பாதயாத்திரை நடத்தி வரும் காங்கிரசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரசார் இந்த பாதயாத்திரையை மேற்கொள்வது ஏன் என்பது குறித்து மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மேகதாது குறித்து அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதனால் அரசியல் நோக்கத்துடன் காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியுள்ளது.
அனுமதி பெற முயற்சி
மேகதாது உள்பட எந்த நீர்ப்பாசன திட்டத்திற்காகவும் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபாட்டு உணர்வுடன் செயல்பட்டது இல்லை. கிருஷ்ணா நீருக்காக காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர். கூடலசங்கமத்தில் கூட்டம் நடத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிருஷ்ணா நதிநீர் திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தனர். ஆனால் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் கோடி தான் செலவு செய்தனர்.
நான் முதல்-மந்திரி ஆன பிறகு திட்ட அறிக்கையை காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதிக்காக தாக்கல் செய்துள்ளோம். அதன் மீது இந்த மாதம் முடிவாக வாய்ப்புள்ளது. மேகதாது திட்டம் குறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணையும் விரைவில் நடைபெற உள்ளது. நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறவும் முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
சித்தராமையாவுக்கு கொரோனாவா?
காங்கிரசார் நேற்று காலை தொடங்கிய பாதயாத்திரை ஹெக்கனூர் வரை வந்தது. அங்கு காங்கிரசார் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது சித்தராமையா மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓய்வு எடுக்குமாறு அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து மதியம் வரையிலான தனது பாதயாத்திரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story