சென்னை மாநகர பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 12 டி.எம்.சி. நீர் இருப்பு இருப்பதால் மாநகர பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதலாக குடிநீர் வினியோகம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருப்பதால் மாநகர பகுதிகளுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குழாய்கள் மூலம் மாநகர பகுதிகளில் 776.58 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட மாநகர பகுதிகளுக்கு 138.12 மில்லியன் லிட்டர், லாரிகள் மூலம் மாநகர பகுதிகளுக்கு 17.80 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட மாநகர பகுதிகளுக்கு 12.04 மில்லியன் லிட்டர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 28.33 மில்லியன் லிட்டர், நகராட்சி பகுதிகளுக்கு மொத்தமாக 28.19 மில்லியன் லிட்டர் என மொத்தம் 1,001.06 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் வினியோகம் அதிகம் வழங்குவதன் மூலம் கழிவுநீரும் அதிகளவு பெறப்படுகிறது. இவற்றை சென்னை கொடுங்கையூர், கோயம்பேடு, பெருங்குடி, நெசப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 637 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் பெறப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
நிரம்பிய தேர்வாய்கண்டிகை ஏரி
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 122 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 882 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3 ஆயிரத்து 112 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 396 மில்லியன் கன அடியும், வீராணம் ஏரியில் 924.45 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.), தற்போது 11 ஆயிரத்து 936.45 மில்லியன் கன அடி (11.93 டி.எம்.சி.) அதாவது 12 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரிக்கு வரும் 622 கன அடி முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. இதுதவிர குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் 15 கன அடி, புழல் ஏரியில் 289 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 149 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 297 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னைக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படும் நிலையில், ஏரிகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு அடுத்த 12 மாதங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என பொதுப்பணித்துறை மற்றும் குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story