‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 Jan 2022 4:20 PM IST (Updated: 10 Jan 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்வாரியம் உடனடி நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஆபத்தான மின்கம்பம் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த கம்பத்தில் இருந்த மின்விளக்கு அகற்றப்பட்டு உள்ளதால் வருத்தமும் அடைந்துள்ளனர். எனவே மீண்டும் மின்விளக்கு பொருத்தப்படுமா?.




மேற்கூரை இல்லாத பயணிகள் நிழற்குடை

சென்னை பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி உள்ளது. மேலும் அதன் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையே இல்லை. இதனால் மாணவர்களும், பயணிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சமூக ஆர்வலர் கமலகண்ணன்.

சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் சேதம்

சென்னை மாதவரம் பால்பண்ணையில் அமைந்துள்ள ஆவின் சிறுவர் விளையாட்டு பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் குழந்தைகளால் உற்சாகமாக விளையாட முடியவில்லை. எனவே சேதமடைந்த உபகரணங்களை மாற்றம் செய்து குழந்தைகள் மீண்டும் குதூகலத்துடன் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

- ஆர்.லேவி, மாதவரம்.





சாலை சேதம் சீரமைக்கப்படுமா?

அச்சரப்பாக்கம் - எலப்பாக்கம் சாலையில் திம்மாபுரம் ஏரி கலங்கல் எதிரே உள்ள சாலை கடந்த மழை வெள்ளத்தின்போது சேதம் அடைந்தது. 10 கி.மீ. நீளமுள்ள இந்த சாலையில் பல இடங்களில் இந்த நிலை தான் உள்ளது. கனரக வாகனங்கள் வந்தால் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களால் ஒதுங்க கூட முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

-எஸ்.ஜெயக்குமார், எலப்பாக்கம்.

போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்

சென்னை கொளத்தூர் அன்னை இந்திரா தெருவின் நடுவே மின்சார கம்பம் உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாற்றிட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-யோகா, கொளத்தூர்.



சரி இல்லாத கழிவுநீர் மூடி

சென்னை தரமணி கட்டபொம்மன் தெரு 100 அடி சாலை எம்.ஜி.ஆர். நகரில் கழுவுநீர் கால்வாய் மூடி சரியாக மூடப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுகிறார்கள். எனவே இந்த மூடியை பாதுகாப்பான முறையில் பொருத்த வேண்டும்.

-முகமது அலி, தரமணி.

நோய் பரவும் அபாயம்

சென்னை மணலி பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் (கிழக்கு) மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் தற்போது இந்த கால்வாய் கழிவுநீர் குளம் போன்று மாறி உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

- பொதுமக்கள், மணலி.



அச்சுறுத்தும் மின்சார கேபிள்

சென்னை கொளத்தூர் யுனைடெட் காலனி 3-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் கேபிள் வயர்கள் தரையை நோக்கி அச்சுறுத்தும் வகையில் செல்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-யுனைடெட் காலனி குடியிருப்போர் நலச்சங்கம்.

நாய்கள் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் ரோடு, தகனிகோட்டை தெரு சந்திப்பு மற்றும் பெருமாள் செட்டி தெரு, சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெரு, சென்னை அசோக்நகர் திருநகர் அப்பர் தெரு ஆகிய இடங்களில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

-பொதுமக்கள்.

சாலையில் பள்ளம்

காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் தாயார்குளம் தெருவில் உள்ள சாலை பள்ளமாக இருக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதமான சாலையை செப்பனிட்டு தர வேண்டும்.

-வாகன ஓட்டிகள்.

மூடி பொருத்தப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வெங்கிடபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள சாலையில் பாலாறு குடிநீர் வால்வு தொட்டி மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் யாரேனும் தெரியாமல் விழுந்துவிட்டாலும், கால்நடைகள் விழுந்து விட்டாலும் ஆபத்தாக அமைந்துவிடும். எனவே இந்த தொட்டிக்கு மூடி அமைத்து தர வேண்டும்.

-கலைவாணி உமாபதி, தெள்ளிமேடு.





Next Story