விவசாயிகளுக்கே தெரியாமல் இலவச மின் இணைப்பில் பெயர் மாற்றம்
தங்களுக்கே தெரியாமல் இலவச மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் பரபரப்பான புகார் மனு கொடுத்தனர்.
தேனி:
விவசாயிகள் புகார்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பலர் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் மனுக்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது. அதில் மனுக்களை மக்கள் ேபாட்டு சென்றனர்.
அந்த வகையில், ஆண்டிப்பட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுக்களில், "எங்கள் பகுதியில் விவசாயிகள் பலர் இலவச மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறோம். தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாயிகள் தங்கமுத்து, ராமலிங்கம், பொம்மக்காளை, ராமசாமி உள்ளிட்ட பலரின் பெயரில் இருந்த இலவச மின் இணைப்பு வேறு நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகள் தங்களின் மின் இணைப்பு விவரங்களை சரிபார்த்த போது பலருக்கும் இதேபோன்று விவசாயிகளுக்கே தெரியாமல், முன்பின் தெரியாத நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் எங்கள் நிலத்தை யாருக்கும் விற்கவில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி பெயர் மாற்றம் நடந்தது என்று தெரியவில்லை. எனவே, இதற்கான காரணங்களை கண்டறிந்து எங்கள் பெயரில் மீண்டும் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
காங்கிரஸ் மனு
அதுபோல், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திரமோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகவும், அதற்கு அங்குள்ள காங்கிரஸ் அரசு தான் காரணம் என்றும் பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அரசியல் நாடகம். டெல்லியில் விவசாயிகள் போராடிய போது அவர்களை சந்திக்க மறுத்த கோபத்தை வெளிக்காட்டும் வகையில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story