பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்- கலெக்டர்
3-வது அலை வேகமாக பரவுவதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறை:-
3-வது அலை வேகமாக பரவுவதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் 24 சதவீதம் பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை. அவர்கள் எந்தவித அச்சமுமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது கொரோனா 3-வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக்சிஜன் படுக்கைகள்
மயிலாடுதுறை, சீர்காழி அரசு ஆஸ்பத்திரிகளில் 300 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மயிலாடுதுறை ரெயிலடி மயூராஹால், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் நேற்று தொடங்கப்பட்டு உள்ளது.
தற்போது நான் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளேன். பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை எடுத்து செல்ல வலியுறுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இருந்தால் தான் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என வணிக நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.
சமூக இடைவெளி
கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். எனவே பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் ‘ஸ்கிரீனிங்’ சென்டர்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் பிரதாப்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story