திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்
3 நாட்களுக்கு பிறகு நேற்று அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்:
3 நாட்களுக்கு பிறகு நேற்று அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் குவிந்தனர்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.
அதன்பேரில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஆகமவிதிப்படி வழக்கம்போல் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றன. 3 நாட்களுக்கு பின்னர் நேற்று சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால், கோவிலில் பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
புனித நீராடி சாமி தரிசனம்
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து பச்சை அல்லது காவி நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும், பக்தர்களின் தரிசனம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story