மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலை தயாரிப்பு பணி மும்முரம்
மாட்டுப்பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலை தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொள்ளிடம்:-
மாட்டுப்பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலை தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெட்டி மாலை
உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன் மற்றும் கால்நடைகள் பொங்கல் பண்டிகை காலத்தில் வழிபடப்படுகின்றன. பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலன்று மாடுகளை விவசாயிகள் அலங்கரிப்பார்கள். இதற்கு ‘நெட்டி மாலை’ பயன்படுகிறது.
ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் வளர்ந்திருக்கும் ஒரு வகை தாவரம் தான் நெட்டி தக்கை. இதை பயன்படுத்தி நெட்டி மாலைகளை தயாரிக்கிறார்கள்.
பாரம்பரிய தொழில்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி மேலவல்லம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி வேலை செய்து வருபவர்கள் ஆவர். இவர்கள், ஆண்டுக்கு 3 மாதங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி நெட்டி மாலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இது இவர்களுடைய பாரம்பரிய தொழிலாகும்.
சமீபகாலமாக இந்த தொழிலில் லாபம் கிடைக்காவிட்டாலும் பாரம்பரிய தொழிலை கைவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெட்டி மாலை தயாரிப்பு இந்த பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி, பின்னலூர் மருவாய்ஏரி உள்ளிட்ட இடங்களில் இருந்து நெட்டி தக்கைகள் சேகரிக்கப்படுகிறது. 40 அல்லது 50 பேர் கூட்டாக சேர்ந்து வெளியூர்களுக்கு சென்று நெட்டி தக்கைகளை சேகரிக்கின்றனர்.
சைக்கிள் பயணம்
தீபாவளி முடிந்ததும் இதற்கான பணிகள் தொடங்கி விடுகின்றன. நெட்டி தக்கைகளை துண்டு துண்டாக வெட்டி காய வைத்து வண்ண சாயம் தேய்த்து, விதவிதமான மாலைகளை தயாரிக்கின்றனர். தக்கைகளை மாலையாக கோர்ப்பதற்கு கத்தாழை நார் பயன்படுத்துகின்றனர். காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, கடலூர், வடலூர், காட்டுமன்னார்குடி, சிதம்பரம், சீர்காழி, வேதாரண்யம், கோடியக்கரை, கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சைக்கிளிலேயே பல நாட்கள் பயணித்து நெட்டி தக்கைகளை விற்பனை செய்கிறார்கள்.
இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளி மோகன் கூறியதாவது:-
வங்கி கடன்
நெட்டி மாலை தயாரிப்பு எங்களுடைய பாரம்பரிய தொழில். விவசாய பணிகளுக்கு உதவும் மாடுகளை அலங்கரிக்க நெட்டி மாலை பயன்படுகிறது. ஒரு சைக்கிளில் 1,600 மாலைகளை விற்பனைக்கு எடுத்து செல்வோம். சாதாரணமாக ஒரு ஜோடி மாலை ரூ.20 வீதம் விற்பனை செய்வோம். வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மாலைகளை வாங்கி செல்வார்கள்.
குடிசை தொழிலாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவு. நெட்டி மாலை வியாபாரம் செய்வதற்கு வட்டிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கடன் வாங்கி சிரமத்துடன் இந்த தொழிலை செய்து வருகிறோம். எனவே அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்கினால் இந்த தொழிலை சிறப்பாக செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story