23179 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்


23179 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:06 PM IST (Updated: 10 Jan 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 179 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 179 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

பூஸ்டர் தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கியது. ஊட்டி நகராட்சி அலுவலகம், சிறுவர் மன்றம், தீயணைப்பு நிலையம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது. 

இங்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள், முன்கள பணியாளர்கள், டாக்டர் கள், செவிலியர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதங்கள் முடிவடைந்ததா என்று சரிபார்த்த பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. 

செல்போனுக்கு குறுஞ்செய்தி

ஊட்டியில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது இணையதளத்தில் சில நாட்கள் கழித்து காலதாமதமாக பதிவு செய்யப்பட்டது. இதனால் 9 மாதங்கள் நிறைவடையவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் முகாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:- முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் 75 முகாம்களில் 300 பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்கள் நிறைவடைந்து இருந்தால், அவர்களது செல்போன் எண்ணுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. 

23,179 பேர்

நீலகிரியில் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 4,457 பேர், முன்கள பணி யாளர்கள் 7,083 பேர், 60 வயதுக்கு மேல் 11 ஆயிரத்து 639 பேர் என மொத்தம் 23 ஆயிரத்து 179 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட உள்ளது.

 இதுவரை முதல் டோஸ் 5 லட்சத்து 32 ஆயிரத்து 469 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 7 ஆயிரத்து 834 பேருக்கும் என மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

முன்னதாக குன்னூரில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story