வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்
வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
கடும் கட்டுப்பாடுகள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பூங்காக்கள், படகு இல்லங்கள் உள்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும் நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அங்கு 2 டோஸ் செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப் பட்டு உள்ளது. அதன்படி வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் மாவட்ட எல்லையில் உள்ள நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா உள்பட 8 சோதனை சாவடிகளில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வருவாய்த்துறை, போலீசார், சுகாதார குழுவினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதுகுறித்து நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது:-
2 டோஸ் கட்டாயம்
தமிழக அரசு அறிவுரையின்படி நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். இதை சோதனை சாவடிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தாங்களாகவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பில்லை என்ற சான்றிதழ்களை கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை நம்பி பலரது வாழ்வாதாரம் உள்ளதால் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டுப்பாடுகள் புதிதாக அறிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story