திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
போக்குவரத்து நெருக்கடி
திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் மற்றும் மேல்நல்லாத்தூர் ஊராட்சிகளை ஒட்டிய எல்லையில் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து பலர் கட்டிடங்கள் அமைத்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைக்காலங்களில் நீர் குடியிருப்புக்களிலும் புகாமல் தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் கடந்த 15 நாள்களுக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
கால அவகாசம்
இதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஷ்னவிஸ் பெர்னான்டோ, துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் முன்னிலையில் பொக்லைன் வாகனம் மூலம் வணிக வளாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வீடுகள் முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற முற்பட்ட போது அங்கிருந்த திரளான பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்கள் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மன்றாடி காலில் விழுந்து கதறி அழுதனர். தங்களுக்கு வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென கண்ணீர்விட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வருகிற 17-ந் தேதி வரை வீடுகளை காலி செய்ய அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story