தூத்துக்குடி அருகே ரூ.10 கோடி செம்மர கட்டைகள் சிக்கியது
தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக லாரியில் பதுக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்ைடகள் போலீசாரிடம் சிக்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக லாரியில் பதுக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்ைடகள் போலீசாரிடம் சிக்கியது.
தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள், செம்மரக்கட்டைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை மற்றும் அனைத்து உளவுப்பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிரமாக ரோந்து சென்று வாகன தணிக்கை மற்றும் சோதனைகள் நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரூ.10 கோடி செம்மரக்கட்டைகள்
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக, தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே, அவரது தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் அந்த குடோனுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு லோடு ஏற்றப்பட்ட டாரஸ் லாரியில் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. அந்த தார்ப்பாயை போலீசார் திறந்து பார்த்தனர்.
அப்போது அதில், சுமார் 5 அடி நீளம் கொண்ட செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான 20 டன் செம்மரக்கட்டைகள் கடத்துவதற்காக லாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி
இதையடுத்து லாரியுடன் 20 டன் செம்மரக்கட்ைடகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்திருக்கலாம் என்றும், இங்கிருந்து கண்டெய்னரில் சரக்குகளுக்கு இடையே மறைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக குடோனில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதிப்பு வாய்ந்த செம்மரங்கள்
செம்மரங்கள் 8 மீட்டர் உயரம் வரையிலும் வளரக்கூடியவை. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. தமிழகம், ஆந்திர மாநிலம் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் வளர்கின்றன. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செம்மரக்கட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
செம்மரக்கட்டைகள் அணுக்கதிர் வீச்சை தடுக்கும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது. இந்த மரங்கள் சித்த மருத்துவத்திலும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. சரும வியாதிகள், மூலம், நீரிழிவு, கை-கால் மூட்டு வீக்கம், விஷக்கடிகள், பாக்டீரியா மற்றும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு செம்மரத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உடலில் நிறமாற்று சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
செம்மரத்தில் உள்ள டீரோஸ்டில்பின்கல், சிடோஸ்டேரோல் போன்ற வேதிப்பொருட்கள் அதிக பலன்கள் தருகிறது. அழகுசாதன பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிக மதிப்புள்ளதாக உள்ளது. இந்த மரங்கள் தற்போது வேகமாக அழிந்து வருவதால் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்பட்டு அரசால் கண்காணிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story