வருங்கால வைப்பு நிதி வழங்கக்கோரி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் திண்டிவனத்தில் பரபரப்பு
வருங்கால வைப்பு நிதியை வழங்க கோரி திண்டிவனம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
ஒப்பந்த தொழிலாளர்கள்
திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 168 பேர் பணியாற்றி வருகிறார்கள். தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் மூலம் பணிபுரியும் இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி கட்டி வந்தனர். ஆனால் இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் 33 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
பணியை புறக்கணித்து தர்ணா போராட்டம்
இதனால் பாதிக்கப்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து விட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு வருங்கால வைப்பு நிதியை வழங்க கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி நகராட்சி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் திண்டிவனம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் சங்க தலைவரும், சட்ட ஆலோசகருமான ஜெயராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விரைவில் நடவடிக்கை
அப்போது நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறுகையில், இப்பிரச்சினை குறித்து தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் பாலகிருஷ்ணனை நேரில் அழைத்து பேசி வருங்கால வைப்பு நிதியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனை ஏற்ற தொழிலாளர்கள் கூடிய விரைவில் எங்களுக்கு வருங்கால வைப்பு நிதியை வழங்காவிட்டால், அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என நகராட்சி அதிகாரியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story