பள்ளி மாணவர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலி
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பள்ளி மாணவர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியானார்.
தாராபுரம்
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பள்ளி மாணவர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவர்
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவரது மகன் சஞ்சய் (வயது 17). கூடலூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் சஞ்சய் திருப்பூர் மாவட்டம் அவினாசி வேலாயுதம்பாளையம் ராயர் கோவில் வீதியில் வசித்து வரும் உறவினரான ஞானசேகர் வீட்டிற்கு வந்தார்.
ஞானசேகரின் மகன்கள் தினேஷ் (19), பிரவின் (17) ஆகியோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்து இருந்தனர். அவர்களுடன் சஞ்சய்யும் கோவிலுக்கு வருவதாக கூறினார். இதையடுத்து சஞ்சய், தினேஷ், பிரவீன் உள்பட 8 பேர் கொண்ட முருக பக்தர்கள் அவினாசியில் இருந்து பழனிக்கு நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை தாராபுரத்தில் உள்ள அமராவதி புதிய ஆற்றுப்பாலம் அருகே வந்தனர்.
ஆற்றில் மூழ்கினார்
இவர்களில் 5 பேர் அமராவதி ஆற்றுப்பாலத்தை கடந்து சற்று தொலைவு முன்னால் சென்று விட்டனர். சஞ்சய், தினேஷ் மற்றும் பிரவீன் ஆகிய 3 பேரும் அவர்களை தொடர்ந்து சென்றனர். அவர்கள் அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும் போது ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் அதில் குளிக்க ஆசை ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக புதை மணலில் சஞ்சய் சிக்கிக்கொண்டார். இதனால் சஞ்சய் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபாய குரல் எழுப்பினார். உடனே தினேஷ் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரும் சஞ்சயை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் சஞ்சயை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார்.
பலி
இதனையடுத்து தினேசும், பிரவீனும் வெளியே வந்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறை வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று நீரில் மூழ்கிய சஞ்சயை தேடினர். இரவு 7 மணியளவில் சஞ்சய் உடல் மீட்கப்பட்டது். இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இச்சம்பவத்தில் தினேஷ் மற்றும் பிரவீன் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story