கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Jan 2022 11:15 PM IST (Updated: 10 Jan 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். அப்போது வாக்குவாதம் மற்றும் தள்ளு- முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,
ஆர்ப்பாட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடி பயணத்தில் தடை ஏற்பட்டது. இதனால் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து நேற்று கரூர் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் கரூர் திண்ணப்பா கார்னர் எதிர்புறம் உள்ள பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீஸ் தரப்பில் திண்ணப்பா கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. 
இந்நிலையில் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் திண்ணப்பா கார்னர் பகுதியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி, பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்வதாக கூறினர்.
பா.ஜ.க.வினர் கைது
இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பினர். அப்போது பா.ஜ.க.வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றபோது, பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 
இதனையடுத்து மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்பட பா.ஜ.க.வினர் 61 பேரை போலீசார் கைது செய்து, போலீஸ் பஸ்சில் ஏற்றி சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story