உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டு
உடுமலை அரசு கலைக்கல்லூரியில், 104 படுக்கை வசதிகளுடன் மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில், 104 படுக்கை வசதிகளுடன் மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு உடுமலை அரசு மருத்துவ மனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் சிறப்பு கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
அத்துடன் அங்கு படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டால் கூடுதல் தேவைக்காக உடுமலை அரசு கலைக்கல்லூரியில் உள்ள வகுப்பறைகளில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டது. அங்கு தனித்தனி அறைகளாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு குறைந்து வந்ததைத்தொடர்ந்து உடுமலை அரசுகலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை வார்டு அகற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கல்லூரி திறக்கப்பட்டதும் மாணவர்கள் வருகையைத்தொடர்ந்து, அந்த கொரோனா சிகிச்சை வார்டு செயல்பட்டு வந்த கட்டிடம், மாணவர்களின் வகுப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மீண்டும் கொரோனா வார்டு
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவது மீண்டும் வேகம் எடுத்துவருவதைத்தொடர்ந்து, அரசு மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையில் மீண்டும் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை வார்டு பயன்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் கூடுதலாக, ஏற்கனவே உடுமலை அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை வார்டு மீண்டும் அந்த வகுப்பறை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.
இதற்காக உடுமலை நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்தரவின் பேரில், நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் க.கவுரிசரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், எஸ்.ராஜ்மோகன் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி துப்புரவுப்பணியாளர்களால், அந்த வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
104 படுக்கைகள்
அரசுகலைக்கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை வார்டில் 104 படுக்கை வசதிகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கட்டில்கள், மெத்தைகள் ஆகியவை இந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள மாணவர்கள் விடுதி மற்றும் மாணவிகள் விடுதிகளில் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் பணிகள் நடந்தது.
உடுமலை அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள உடுமலை மனமகிழ் மன்ற வளாகத்தில் கொரோனா பெருந்தொற்று வகைப்படுத்தல் மையம் நேற்று அமைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டு மற்றும் உடுமலை மனமகிழ் மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று வகைப்படுத்தல் மையம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆர்.டி.ஓ.கீதா, தாசில்தார் ராமலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது நிலவருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராமநிர்வாக அலுவலர் தமிழ்செல்வன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story