பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
பொங்கல் பரிசு தொகுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பரிசு தொகுப்புகள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று அவர் கூத்தம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணியினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொருட்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா?, அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்கள் தரம் நன்றாக உள்ளதா?, எடை சரியான அளவில் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
அறிவுறுத்தல்
பின்னர் உஞ்சனை, மேட்டுபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய கலெக்டர், பொதுமக்களிடம் பொருட்களின் எண்ணிக்கையை இங்கேயே சரி பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
குறைகள் இருந்தால் ரேஷன் கடைகளில் அறிவிக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறினார். ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story