நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு: 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி-ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆன்லைனில் முன்பதிவு செய்து, 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
அரங்கநாதர் கோவில்
நாமக்கல் மலைகோட்டையின் அடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொர்க்க வாசல் திறப்பு
சொர்க்க வாசல் திறப்பின் போது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை கட்டளைதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கு 250 நபர்கள் வீதம் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அவரவர் விருப்பதிற்கு ஏற்ப முன்பதிவு செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் கோவில் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
உடல் வெப்பநிலையை அறியும் பொருட்டு, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விழா பக்தர்கள் காணும் வகையில் வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story