கடந்த வாரத்தை விட அதிக விலை: ராசிபுரத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட அதிக விலைக்கு பருத்தி விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராசிபுரம்:
பருத்தி ஏலம்
ராசிபுரம் அருகே உள்ள ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துகாளிபட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் 5 ஆயிரத்து 535 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.
அதிக விலை
ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9,412-க்கும், அதிக பட்சமாக ரூ.10,769-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.14,559-க்கும், அதிக பட்சமாக ரூ.15,799-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5,450-க்கும், அதிகப்பட்சமாக ரூ.7,499-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு பருத்தி விற்பனையானது. இதனால் ஏலத்துக்கு பருத்தியை கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story