நாமக்கல் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்


நாமக்கல் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:30 PM IST (Updated: 10 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கி வைத்தார்.

நாமக்கல்:
பூஸ்டர் தடுப்பூசி
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 77 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ பணியாளர்கள் மூலமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. தகுதியானவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
2,480 படுக்கைகள் தயார்
மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட 1,081 நபர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மொத்தம் 2,480 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என இல்லாமல், தொற்றின் அறிகுறிகள் சிறிய அளவிலேயே உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்களிடமிருத்து மற்றவர்களுக்கு முன்பைவிட மிக விரைவில் பரவிவிடும். பொதுமக்கள் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்தி கொண்டால் நோய்த்தொற்றின் பரவலை தடுத்திட முடியும்.
வீட்டு தனிமை
நமது மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 276 நபர்களில், 220 நபர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
வீட்டுதனிமையில் உள்ளவர்களிடம் உடல் நலன் குறித்து தொடர்ந்து கேட்கப்பட்டு, 6 மணி நேரத்திற்கு ஒருமுறை உடலின் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவும், தேவையான மாத்திரைகள் உட்கொள்வதை உறுதி செய்திடவும் கட்டுப்பாட்டு அறையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டுதனிமையில் உள்ளவர்களிடம் தொடர்ந்து பேசி கண்காணித்து வருகின்றார்கள்.
கூடுதல் படுக்கை வசதி
இதுமட்டுமல்லாமல் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீட்டுதனிமையில் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் மொத்தம் 600 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றை ஆயிரமாக உயர்த்திடும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், உதவி இயக்குனர் (சுகாதாரம்) நக்கீரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story