காங்கேயம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


காங்கேயம் பஸ் நிலையத்தில் பயணிகள்  கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 10 Jan 2022 11:40 PM IST (Updated: 10 Jan 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல காங்கேயம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

காங்கேயம்
முழு ஊரடங்கு அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல காங்கேயம் பஸ் நிலையத்தில் பயணிகள்  கூட்டம் அலைமோதியது.
கொரோனா ஊரடங்கு
உலகம் முழுவதும் ஒமைக்ரான்  வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இதற்கிடையில் வாரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த படலாம் என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் நிறுவனங்கள் இயங்காது. இதனால் வேலை கிடைக்காது.  பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்படும். இதனால் ஊருக்கும் போக முடியாமல் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் ஏற்படும் நிலைமை உருவாகும். 
பயணிகள் கூட்டம்
அது மட்டுமல்ல பொங்கல் திருநாளும் வருவதால் சொந்த ஊருக்கு சென்றால் நிம்மதியாக இருக்கலாம் என்று பெரும்பாலான தொழிலாளர்கள் கருதுகிறார்கள். இதனால் ஊரடங்கு அரசு அமல்படுத்தும் முன்பு எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டும் என்று தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக காங்கேயம் பஸ் நிலையத்தில் நேற்று வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக பயணிகள் வெகு நேரம் காத்திருந்தனர். 
காங்கேயத்தில் இருந்தும், காங்கேயம் வழியாகவும் ஈரோடு, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, கடலூர், கும்பகோணம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் காங்கேயம் பஸ் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story