பசுபதிபாளையத்தில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Jan 2022 6:11 PM GMT (Updated: 10 Jan 2022 6:11 PM GMT)

பசுபதிபாளையத்தில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர், 
3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைப்பு
கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதிக்கு உட்பட்ட விவேகானந்தா தெருவில் தனியார் பள்ளி அருகில் குடியிருப்பு வீடுகள் அதிகளவில் உள்ளது. அங்கு குடியிருப்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை  அந்த குடியிருப்பு முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் குடியிருப்பு முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்து இருந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து உள்ளன. இதனை அடுத்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
அதற்குள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து துறையில் நடத்துனராக பணிபுரியும் ரஞ்சன் (வயது 58) என்பவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரியா (32) என்பவருடைய ஸ்கூட்டர் ஆகியன முற்றிலுமாக எரிந்து போயின. டாஸ்மாக்கில் பணிபுரியும் சக்திவேல் (32) என்பவருடைய மோட்டார் சைக்கிள் பாதி எரிந்த நிலையில் தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
வாலிபர் கைது
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இந்தநிலையில் கரூர் மாவட்டம் லிங்கத்தூரை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவர் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பிரகாசுக்கும், குடியிருப்பில் வசித்து வரும் பிரியாவுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story