பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Jan 2022 11:43 PM IST (Updated: 10 Jan 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

நொய்யல், 
வெல்லம் தயாரிப்பு
கரூர் மாவட்டம் நொய்யல், சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். கரும்புகளை வெட்டி செல்வதற்காக புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,700 வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.
ஏல மார்க்கெட்
வாங்கிய கரும்புகளை சாறுபிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை என தயார் செய்கின்றனர்.வெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 
அங்கு தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வியாபாரிகள் வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். வாங்கிய வெல்ல சிப்பங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
தயாரிப்பு தீவிரம்
இந்நிலையில் வருகிற 14-ந்தேதி தைப்பொங்கலும், 15-ந்தேதி மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். அதற்காக ஏராளமான வெல்லங்கள் தேவைப்படுகின்றன. 
நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் வெல்லம் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லத்தின் விலை உயர்ந்துவருகிறது. கடந்த வாரங்களில் 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1100-க்கும், அச்சுவெல்லம் ரூ.1150 க்கும் விற்பனையானது. 
விலை உயர்வு
வெல்லத்தின் தேவை அதிகரிப்பின் காரணமாக தற்போது 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் ரூ.1300-க்கும், அச்சுவெல்லம்ரூ.1420-க்கும் விற்பனையாகிறது. வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வெல்லங்களை போட்டிபோட்டு எடுத்து விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதனால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளிலிருந்து வெல்லங்களை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story