குமரியில் மேலும் 11 போலீசாருக்கு கொரோனா


குமரியில் மேலும் 11 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jan 2022 11:44 PM IST (Updated: 10 Jan 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மேலும் 11 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதோடு தினசரி பாதிப்பு 244 ஆக உயர்ந்தது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மேலும் 11 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதோடு தினசரி பாதிப்பு 244 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக 200-க்குள் இருந்த தினசரி பாதிப்பு நேற்று 250-ஐ நெருங்கி உள்ளது. 
அதாவது 2,646 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
11 போலீசாருக்கு கொரோனா
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்கனவே 11 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த சக போலீசாருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேலும் 11 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது பாதிக்கப்பட்டு உள்ள போலீசாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள் மற்றும் போலீஸ்காரர்கள் என மொத்தம் 235 பேர் பாதிக்கப்பட்டனர். அதுவே 2-வது அலையின்போது மொத்தம் 192 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது வரை 22 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பணியில் ஈடுபடும் போலீசார் கவனமாக இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

Next Story