பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
குமரி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.
பூஸ்டர் தடுப்பூசி
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலுக்கு இடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும் வேகமெடுத்து உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்வதால் கடந்த 3-ந் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10-ந் தேதி முதல் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
இதே போல குமரி மாவட்டத்திலும் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நாகர்கோவில் வடசேரியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சுகாதார பணியாளர்கள்
இந்த பணிகளை தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதுவரை 11 லட்சத்து 89 ஆயிரத்து 529 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 9 லட்சத்து 969 நபர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதுவரை
79 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 60 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இலக்கு நிர்ணயம்
ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி 9 மாதம் முடிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த மாத இறுதிக்குள் 26 ஆயிரத்து 500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மீனாட்சி, மாநகர நல அதிகாரி விஜயசந்திரன், தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், மாவட்ட மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story