ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை


ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 10 Jan 2022 6:23 PM GMT (Updated: 10 Jan 2022 6:23 PM GMT)

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம், 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

43 மீனவர்கள் கைது

 ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 18-ந்தேதி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக 19-ந் தேதி காலையில் இலங்கை கடற்படை கைது செய்தது. ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 43 மீனவர்களையும், அவர்களின் 6 படகுகளையும் பறிமுதல் செய்து தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டங்களை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் மீனவர்களை கைது செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை விடுவிக்கப்படாததால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கைக்குழந்தைகளுடன் ராமநாதபுரம் வந்தனர். 

 முற்றுகை
இவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் நேரில் வந்து மனுவை பெற்றுக்கொண்டார்.
அவரிடம், இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களையும் பொங்கல் பண்டிகைக்குள் விடுதலை செய்து படகுகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கைக்குழந்தைகளோடு வந்து அழுது புலம்பி போராட்டம் நடத்தியது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story