11 ஆயிரத்து 908 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்-கலெக்டர் தகவல்


11 ஆயிரத்து 908 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2022 12:02 AM IST (Updated: 11 Jan 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இந்த மாதம் 11 ஆயிரத்து 908 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் இந்த மாதம் 11 ஆயிரத்து 908 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை பரவல் தொடங்கியுள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் முன்களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 
இதன் தொடக்க விழா சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

 11,908 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப்படி, முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 908 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். இதில் கோவிஷீல்ட் 11 ஆயிரத்து 173 பேருக்கு செலுத்த உள்ளோம். மீதமுள்ள 735 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த உள்ளோம். 
இதில் சுகாதார பணியாளர்கள் 3 ஆயிரத்து 780 பேர்களும், முன்கள பணியாளர்கள் 3 ஆயிரத்து 945 பேர்களும் உள்ளனர். மீதமுள்ள 4 ஆயிரத்து 183 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர் இணை நோய் உள்ளவர்கள் ஆவார்கள். 

85 சதவீதம் பேர்

மேலும் மாவட்டத்தில் 85 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். இன்னும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் முதல் டோஸ் ஊசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதிபாலன், துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுருகன், மருத்துவ அலுவலர் டாக்டர் ரபீக், உதவி மருத்துவ அலுவலர்கள் மிதுன், செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story