தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 11 Jan 2022 12:30 AM IST (Updated: 11 Jan 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


பெண்களை ஏற்ற மறுக்கும் அரசு பஸ்கள் 
அரசு பஸ்களில் பெண்கள், மாணவர்களுக்கு இலவச பயணம் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சியிலிருந்து தோகைமலை வரைக்கும் அரசு நகரப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் கிராமப்பகுதியிலிருந்து வேலைக்கு வரும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்கின்றனர். இதனிடையே சமீபகாலமாக அரசு நகர பஸ்கள் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் தள்ளி நிறுத்தப்படுவதால் பெண்களால் ஓடிச்சென்று ஏற முடியவில்லை. பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களை நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜயராஜ், சர்ச்காலனி, திருச்சி.

சிதிலமடைந்த மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், கே.கே.நகர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கிருஷ்ணமூர்த்தி, திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மேலப்பட்டி அண்ணாநகர் மேட்டுப்பட்டி சாலையோரத்தில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலப்பட்டி, புதுக்கோட்டை. 
அரியலூர் மாவட்டம், உடையார்ப்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகர் முதல் தெரு வீதி பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அம்பேத்கர் நகர், அரியலூர். 

தெப்பக்குளம் தூர்வாரப்படுமா? 
கரூர் மாவட்டம், குளித்தலை  அய்யர்மலை  ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு  சொந்தமான தெப்பக்குளம் குளித்தலை ரெயில் நிலையம் அருகில் உள்ளது. இந்த தெப்பக்குளம் தூர்வாரப்படாமலும், பாசி படர்ந்தும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குளத்தை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குளித்தலை, கரூர். 

நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணி 
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, வத்தனாகுறிச்சி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூசையப்பர்பட்டிணம்- வேலாங்குடிபட்டி செல்லும் சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் பெயர்க்கப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வத்தனாகுறிச்சி, புதுக்கோட்டை.

டாஸ்மாக் கடை இடம் மாற்றப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5 லட்சத்திற்கும் மேலாக மதுபாட்டிகள் விற்பனையாகிறது. இந்த கடை மெயின் ரோட்டில் உள்ளதால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், மதுப்பிரியர்கள் சாலையில் நிற்பதாலும் போக்குவரத்து பாதிப்புகளும் மற்றும் விபத்துகளும் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் சாலையைக் கடக்கும் போது பல்வேறு இன்னல்களுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். எனவே அகரம்சீகூர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
பொதுமக்கள், அகரம்சீகூர்,  பெரம்பலூர்.

பேருந்து செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பெரகம்பி கிராமத்தில் இருந்து சீதேவிமங்கலம் செல்லும் ஒன்றிய சாலை 5 கிலோ மீட்டர் தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக துறையூரில் இருந்து செட்டிக்குளம், பெரகம்பி, பாடாலூர் வழியாக லால்குடி வரை செல்லும் அரசு போக்குவரத்து கழக புறநகர பஸ் தினமும் ஆறு நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக சீதேவிமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் பெரகம்பியில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகிறார்கள். இந்த ஒன்றிய சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சரவணன், புத்தனாம்பட்டி, திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
 திருச்சி அய்யப்ப நகர் வால்மிகி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அய்யப்ப நகர், திருச்சி. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரை அடுத்துள்ள பெரிய கொத்தமங்கலம் குடியானத் தெருவில் முறையான சாக்கடை வாய்க்கால் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரிய கொத்தமங்கலம், திருச்சி. 

பயன்படுத்த முடியாத ரெயில்வே சுரங்கப்பாதை 
திருச்சி மாவட்டம், லால்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர் இதுவரை அகற்றப்படாததால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ரெயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரம்யா, லால்குடி, திருச்சி. 


Next Story