மனைவியை கொடூரமாக கொன்ற வங்கி ஊழியர்


மனைவியை கொடூரமாக கொன்ற வங்கி ஊழியர்
x
தினத்தந்தி 11 Jan 2022 1:01 AM IST (Updated: 11 Jan 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வங்கி ஊழியர் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றார். மகனின் கண்முன் இந்த வெறிச்செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.

விருதுநகர், 
விருதுநகரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வங்கி ஊழியர் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றார். மகனின் கண்முன் இந்த வெறிச்செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
வங்கி ஊழியர் 
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அவரது தந்தை கிருஷ்ணன் இறந்ததை தொடர்ந்து கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. 
தற்போது மதுைர மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி கற்பகம் (30). இவர் கண்ணனின் சொந்த அத்தை மகள் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது.  நிகர்ஜித் (10), ஹரிஷ் கண்ணா (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 
சந்தேகம்
சமீப காலமாக கண்ணன், மனைவி கற்பகத்தின் நடத்தை மீது சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கற்பகம் தனது 2 மகன்களுடன், சிவகாசி மணிநகரில் உள்ள தனது சகோதரர் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுவிட்டார். 
வேறு நபர்களுடன் என்னை இணைத்து கணவர் சந்தேகப்படுகிறார், மிகவும் கொடுமைப்படுத்துகிறார் என்று கூறி கற்பகம் வேதனை அடைந்துள்ளார். ஆதலால் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தன் சகோதரரிடம் கூறி கதறியுள்ளார். 
கத்திக்குத்து 
 இந்தநிலையில் கண்ணன் தனது உறவினர் பரமசிவத்துடன் ஜெயக்குமார் வீட்டிற்கு வந்து, நான் இனிமேல் பிரச்சினை செய்ய மாட்டேன் என்று கற்பகத்தின் காலிலும், ஜெயக்குமாரின் காலிலும் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனாலும், கற்பகம் கண்ணனுடன் செல்ல மறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கற்பகத்தின் சகோதரர் ஜெயக்குமார் சமரசம் செய்து, கற்பகத்தையும் குழந்தைகளையும் கண்ணனுடன் விருதுநகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து நேற்று காலை 6.45 மணியளவில் கண்ணன் தனது இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்த போது, சமையல் அறையில் வைத்து கற்பகத்துடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
 அப்போது மூத்த மகன் நிகர்ஜித், தாயார் கற்பகத்தின் அலறல் சத்தத்தை கேட்டு பதறி எழுந்து சமையல் அறைக்கு சென்றபோது கண்ணன், கற்பகத்தின் மேல் அமர்ந்து கற்பகத்தை கத்தியால் குத்தியதை கண்டு அலறினான். 
ெவளியில் தள்ளி பூட்டினார்
அதனைக் கண்ட கண்ணன், நிகர்ஜித்தை வெளியே தள்ளி கதவைப்பூட்டி விட்டு பின்னர் சிறிது நேரத்தில் கண்ணன் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சிறுவன் நிகர்ஜித் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம், செல்போனை வாங்கி தனது மாமா ஜெயக்குமாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறி அழுதுள்ளான்.
உடனே ஜெயக்குமார் தனது உறவினருடன் வந்து பார்த்த போது, கற்பகம் கொலையுண்டு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கைது 
இதுபற்றி ஜெயக்குமார், விருதுநகர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து கற்பகத்தின் உடலை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஜெயக்குமார் (35) கொடுத்த புகாரின் பேரில் புறநகர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். 
இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Next Story