வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா. உதவி கலெக்டருக்கும் தொற்று
வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
வேலூர்
வேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயனுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியாவும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் கொரோனா பரவலின் வேகம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது.
வேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி, லேசான காய்ச்சல் காணப்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதையடுத்து அவர் டாக்டர்களின் பரிந்துரையின்படி வேலூர் வேலப்பாடியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. 2-வது முறையாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர் கொரோனா 2 தடுப்பூசி செலுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியாவுக்கும் லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் வேலூரில் உள்ள உதவி கலெக்டர் குடியிருப்பில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்று வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் மோகன் என்பவருக்கும் தொற்று உறுதியானது. அவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
வேலூர் உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த அலுவலகங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
Related Tags :
Next Story