10 நாட்கள் கபசுர குடிநீர் வழங்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து 10 நாட்கள் கபசுர குடிநீர் வழங்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து 10 நாட்கள் கபசுர குடிநீர் வழங்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது :-
அபராதத்தை அதிகரிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தொற்று பாதித்தவர்கள் தொடர்பில் இருந்தவர்கள், பெரிய கடைகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைத்து அதிக அளவில் பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று பாதித்து எவ்வித பிரச்சினைகளும் இல்லாதவர்களை சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைத்து, அங்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மையங்களில் உணவு, தண்ணீர், கழிப்பிட வசதிகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தொற்று அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை அதிகரிக்க வேண்டும். நகரத்தில் அதிக பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், இவைகள் கிராமப்பகுதிகளில் பரவாமல் தடுக்க அனைத்து இடங்களிலும் பொது மக்கள் முக கவசம் அணிவதை உள்ளாட்சித்துறை, காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அதிக கூட்டம் கூடும் மார்க்கெட், சந்தைகள் இவைகளுக்கான மாற்று இடங்களை கண்டறிந்திட வேண்டும். முடிந்தவரை தெருக்களில் சென்று கூட்டம் இல்லாமல் விற்பனை செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கபசுர குடிநீர்
அனைத்து மருத்துவமனைகளிலும் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர் படுக்கைகள் மற்றும் செரியூட்டிகளின் நிலைமை, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் எந்திரங்களின் நிலைமைகள் குறித்து மருத்துவர்கள் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கிட வேண்டும்.
துறை சம்பந்தமான ஆய்வுக் கூட்டங்களை இணையம் வழியாக நடத்திட வேண்டும். அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story