பெண்ணை பிரம்பால் தாக்கிய 3 பேர் கைது
பெண்ணை பிரம்பால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம் அருகே நரையப்பபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் சக்தி சேர்மன் (வயது 33). இவருடைய மனைவி பூமாரி (21). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பூமாரி கணவரிடம் கோபித்து கொண்டு ராமச்சந்திரபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.
நேற்று நரையப்பபுரத்தில் உள்ள கோவிலில் சப்பர பவனி நடந்தது. அப்போது அங்கு சென்ற சக்தி சேர்மன், மனைவி பிரிந்து சென்றது தொடர்பாக சாமியாடிகளிடம் குறி கேட்டார். இதையடுத்து சாமியாடிகளான அப்பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (50), அரிலிங்கம் (33) ஆகிய 2 பேரும் சப்பரத்துடன் ராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமாரியின் வீட்டுக்கு சென்று, அவரை அழைத்து வருவதற்காக சப்பரத்தில் ஏறுமாறு கூறி பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பூமாரி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி சேர்மன், சாமிநாதன், அரிலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story