நெல்லையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் 16,800 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா உருமாறி ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இதையடுத்து 3-வதாக பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நேற்று காலை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசியை ஏற்கனவே 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்கள் செலுத்திக் கொள்ளலாம். முதல் 2 தவணையிலும் எந்தவகை தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதோ அதே வகை மருந்துதான் பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும்.
மாவட்டத்தில் 5 ஆயிரத்து 378 சுகாதார பணியாளர்கள், 3 ஆயிரத்து 811 முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 7 ஆயிரத்து 611 பேர் என மொத்தம் 16 ஆயிரத்து 800 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 79 சதவீதம் பேர், அதாவது 10 லட்சத்து 40 ஆயிரத்து 950 பேரும், 2-வது தவணையாக 49 சதவீதம் அதாவது 6 லட்சத்து 49 ஆயிரத்து 904 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 76 ஆயிரத்து 400 சிறுவர்-சிறுமிகளில் 55 ஆயிரத்து 451 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு ‘கோவின் செயலி’யில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யாமலும் நேரடியாக தடுப்பூசி மையத்துக்கே சென்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கு ஏற்கனவே 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் முதல் கட்டமாக செவிலியர்கள், டாக்டர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் ஷர்மிளா, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story