கரும்பு, பனங்கிழங்கு விற்பனை அமோகம்
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு மற்றும் பனங்கிழங்கு விற்பனையும், புதுமண தம்பதிகளுக்கான சீர்வரிசை பொருட்களின் வியாபாரமும் மும்முரமாக நடக்கிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு மற்றும் பனங்கிழங்கு விற்பனையும், புதுமண தம்பதிகளுக்கான சீர்வரிசை பொருட்களின் வியாபாரமும் மும்முரமாக நடக்கிறது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள் கிழங்கு, மண்பானைகள் போன்றவை தான் நினைவுக்கு வரும்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் நாகர்கோவில் வடசேரி சந்தை மற்றும் ஒழுகினசேரியில் உள்ள தனியார் சந்தை ஆகியவற்றில் விற்பனைக்காக கரும்புகள் கட்டு, கட்டாக கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல இடங்களில் சாலை ஓரமாகவும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. எனவே 2 நாட்களுக்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கரும்புகளை வாங்கிச் செல்வதை காண முடிந்தது. விற்பனை அமோகமாக நடப்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீர்வரிசை பொருட்கள்
இதேபோல பனங்கிழங்கும் கட்டு, கட்டாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் புதுமண தம்பதிகளுக்கு தலைப்பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வாங்கி கொடுப்பது சற்று வித்தியாசம் ஆனதாகும். சீர்வரிசை பொருட்களில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு தனி மவுசு உண்டு. அவை குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கடை வீதிகளில்...
அதாவது சிறிய உருளிகள், காமாட்சி விளக்கு, துணை விளக்கு, பெரிய விளக்கு, அதற்கான தாம்பூலம், பூஜை அறையில் பூ போட்டு வைக்கும் உருளி, காமதேனு சிலை, சந்தனம் மற்றும் குங்கும கிண்ணம், தூபக்கால், சூடத்தட்டு, பத்தி ஸ்டாண்டு, பூஜை செம்பு, பஞ்சபாத்திரம், உத்ராணி, கென்டி, பித்தளை பானைகள்-3, பெரிய செம்பு பானை-1, அதற்கான மூடிகள், வீட்டில் உபயோகப்படுத்தும் தம்ளர் முதல் சாப்பாடு தட்டு வரை, சருவங்கள், கரண்டிகள், பித்தளை அண்டா, சில்வர் அண்டா, வெண்கல அகப்பை, குக்கர் வகைகள் அவற்றில் அடங்கும்.
இந்த சீர்வரிசை பொருட்கள் நாகர்கோவில் கடை வீதிகளில் உள்ள பாத்திர கடைகள் அனைத்திலும் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் சென்னை, மதுரை, கும்பகோணம், திருப்பூர், நெல்லை மற்றும் மராட்டிய மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. பெண் வீட்டார் புதுமண தம்பதிகளுக்கு வழங்க இப்போதே சீர்வரிசை பொருட்களை வாங்கி வைத்து வருகிறார்கள். இதேபோல் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக பொங்கல் கரும்புகள், பனங்கிழங்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story