மாடுபிடி வீரர்கள், காளைகள் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்-அமைச்சர் மூர்த்தி பேட்டி


மாடுபிடி வீரர்கள், காளைகள் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்-அமைச்சர் மூர்த்தி பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2022 1:57 AM IST (Updated: 11 Jan 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

மாடுபிடி வீரர்கள், காளைகள் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை
மாடுபிடி வீரர்கள், காளைகள் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் பதிவு இன்று  தொடங்குகிறது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கொரோனா பரவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது.
 இந்தாண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது.
அதனைத்தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென்மண்டல ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகர் சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் தங்கத்துரை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அனுமதி
கூட்டத்திற்கு பின் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிைய நடத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார். எனவே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள், வீரர்கள் பதிவு ஆன்லைன் முறையில் நாளை (அதாவது இன்று) தொடங்குகிறது. 
ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் வேறு இடத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள முடியாது.
ஒரு ஜல்லிக்கட்டில் 300 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதே போல் ஒரே நேரத்தில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். மேலும் ஒரு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். உள்ளூர்க்காரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியின் பார்வையாளர்களாக கலந்து கொள்ள முடியும்.
வெளிமாவட்டத்தினர் மற்றும் பிற பகுதியினர் யாருக்கும் அனுமதி தரப்படாது. போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர், உதவியாளர் ஆகியோர் கட்டாயம் 2 தவணை தடுப்பூசிகள் போட்டு இருக்க வேண்டும். மேலும் போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழும் வைத்து இருக்க வேண்டும்.
நாட்டு மாடுகள்
காளைகள் பதிவு ஆன்லைன் முறையில் நடைபெறுவதால் இ-சேவை மையங்கள் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும்.
கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்தாண்டு முறைகேடுகள் எதுவும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல் காலை 7 மணிக்கு தொடங்கும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாட்டினை மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் செய்து வருகின்றன. அங்குள்ள இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு வந்தால் கமிட்டி மூலம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இல்லையென்றால் தமிழக அரசே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story