தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்தை சீர் செய்யலாமே?
தர்மபுரி நகரில் முக்கிய சாலைகளான ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு உள்ளிட்ட சாலைகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இங்கு கனரக வாகனங்கள் செல்வதாலும், கடைகளின் முன்பு வாடிக்கையாளர்கள் நிறுத்தி செல்லும் இருசக்கர வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவக்குமார், நாச்சியப்ப கவுண்டர் தெரு, தர்மபுரி.
====
பழுதடைந்த மேல்நிலை தொட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பெரமன்கொட்டாய் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டியின் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்ததொட்டியை இடித்து அகற்றகோரி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடிவடிக்கையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடித்து அகற்றுவார்களா?
-ஊர்மக்கள், பெரமன்கொட்டாய், கிருஷ்ணகிரி.
===
வீணாகும் குடிநீர்
நாமக்கல் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைத்து வாரம் இருமுறை வீதம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் பிள்ளையார் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி, சாலையில் செல்கிறது. இதை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாமக்கல்.
==
ஜல்லிகள் பெயர்ந்த தார் சாலை
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஓம்சக்தி நகரில் சுமார் 600 வீடுகள் உள்ளன. அந்தப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டன. இந்த பணி முடிந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகிறது. இதுவரை சாலை பணி முடிக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பணியை தொடங்கி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-ஊர்மக்கள், பாகல்பட்டி, ஓமலூர்.
சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டியில் இருந்து மகுடஞ்சாவடி வரை தார் சாலையை புதுப்பிப்பதற்காக பழைய தார் சாலையை பெயர்த்துபோட்டு சுமார் 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிப்பதற்கான பணியை தொடங்குவார்களா?
-ஊர்மக்கள், நடுவனேரி, சேலம்.
===
வர்ணம் பூசப்படுமா?
சேலம் கரும்பாலை பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் அந்த பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கழிவு நீரை அக்கற்றவும், வேகத்தடையில் வர்ணம் பூசவும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், கரும்பாலை, சேலம்.
===
Related Tags :
Next Story