சேலத்தில் சோகம்: கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண் தற்கொலை


சேலத்தில் சோகம்: கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 Jan 2022 8:49 PM GMT (Updated: 2022-01-11T02:19:24+05:30)

சேலத்தில், கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அன்னதானப்பட்டி,
கருப்பு பூஞ்சை
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த நந்தினியை (22) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் சேலம் தாதகாப்பட்டி குலாலர் மண்டபம் தெரு பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நந்தினிக்கு கருப்பு பூஞ்ைச எனும் நோய்த்தொற்று பாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நோய் தாக்கம் காரணமாக உடல் மெலிந்து, வாய் பகுதியில் பல் கொட்டிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதற்கு அவர் பல இடங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதன்தொடர்ச்சியாக தனியார் பல் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பல் செட் ஒன்று கட்டி உள்ளார்.
தற்கொலை
இருப்பினும் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஏளனமாக நினைப்பார்கள் என்று எண்ணி நந்தினி கவலை அடைந்தார். இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட நந்தினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது அறையில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் தான் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்று அறைக்குள் மயங்கி கிடந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு மயங்கி கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நந்தினியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்த பெண், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story