வியாபாரிகள் சாலை மறியல்


வியாபாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jan 2022 2:24 AM IST (Updated: 11 Jan 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மாலைநேர காய்கறி அங்காடியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்;
தஞ்சையில் மாலைநேர காய்கறி அங்காடியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாலைநேர காய்கறி அங்காடி
தஞ்சை திலகர் திடல் அருகே அம்மா மாலை நேர காய்கறி அங்காடி உள்ளது. இங்கு சுமார் 84 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் ரூ.30 வாடகை வசூல் செய்யப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் திடீரென மாலை நேர காய்கறி அங்காடிக்கு சென்றனர். அங்கு இருந்த வியாபாரிகளிடம், கடை வாடகை சரியாக செலுத்தாத காரணத்தினாலும், வேறு கட்டிடம் இந்த பகுதியில் கட்ட வேண்டியது இருப்பதாலும் அங்காடியை இடிக்க முடிவு செய்து இருக்கிறோம். எனவே நீங்களாகவே கடைகளை காலி செய்யும்படி தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் தங்களது சக வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்காடி முன்பு வியாபாரிகள் திரளாக ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா தலைமை தாங்கினார்.
நிர்வாகக்குழு உறுப்பினர் பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, தெருவோர வியாபாரிகள் சங்க நிர்வாகி முத்துக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டு, கடைகளை இடிக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதை அறிந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி ஆணையரை சந்தித்து உங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும்படி போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று மறியல் போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர். இதையடுத்து சங்க நிர்வாகிகள் சிலரை போலீசார் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள், மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மாலையில் மீண்டும் வரும்படி ஆணையர் கூறியதை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர்.

Next Story